காப்பீட்டுத் திட்டம்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 28th January 2019 03:43 AM | Last Updated : 28th January 2019 03:43 AM | அ+அ அ- |

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்திய மத்திய அரசின் சுகாதாரத் திட்ட அதிகாரிகள்.
பிரதமரின் "ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படும் விதம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவர்கள் அப்போது நேரில் சந்தித்துப் பேசினர். மேலும், மருத்துவமனையில் உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கு அத்திட்டம் குறித்த தகவல்கள் முறையாக தெரிந்திருக்கின்றனவா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
நாட்டு மக்களில் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் "ஆயுஷ்மான் பாரத்' திட்டம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அதன் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்
படுகிறது.
மொத்தம் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் இத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும், ஏழை மக்கள் இனி மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அத்திட்டத்தைத் தொடங்கியபோது பிரதமர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கெனவே முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருப்பதால், அதனுடன் "ஆயுஷ்மான் பாரத்' திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காப்பீட்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். அதன்படி, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிரதமரின் ஜன ஆரோக்கியத் திட்டத்தின் தலைமை செயல் இயக்குநர் டாக்டர் இந்து பூஷண் தலைமையிலான குழுவினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கும், தீக்காய பிரிவுக்கும் சென்ற அக் குழுவினர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்துப் பேசினர்.
அதைத் தொடர்ந்து காப்பீட்டு பிரிவுக்குச் சென்ற அவர்கள், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் தொடர்பான புரிதல்கள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாநில நகர்ப்புற மருத்துவத் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி, காப்பீட்டு திட்டத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.