அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் கைது

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் ஜாக்டோ -ஜியோ போராட்டம் சற்று தீவிரமடைந்துள்ளது. சென்னை,  வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக அளவிலான அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மறியலில்
சென்னை எழிலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்
சென்னை எழிலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் ஜாக்டோ -ஜியோ போராட்டம் சற்று தீவிரமடைந்துள்ளது. சென்னை,  வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக அளவிலான அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த  22-ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பில் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் போராட்டம்  தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் இந்த போராட்டம் திங்கள்கிழமை சற்று தீவிரமடைந்தது. சென்னை எழிலகம் வளாகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் திரண்டனர்.  அப்போது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், அந்தோணிசாமி, பக்தவத்சலம் ஆகியோர் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து சிறிது நேரம் தங்கள் கருத்துகளை வலியுறுத்தி பேசினர். 
அதன் பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார்  கைது செய்தனர். எழிலகம் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் அரசு ஊழியர்களை சாலையில் அமர விடாமல் தடுத்து நிறுத்தி காவல் துறை வாகனங்களின் ஏற்றிச் சென்றனர்.  சில  ஆண்- பெண் ஊழியர்கள் தாமாக முன்வந்து கைதாகினர். கைது செய்யப்பட்ட ஊழியர்கள் புதுப்பேட்டை, பெரம்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.  வேலைநிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை பங்கேற்காத சில சங்கங்களும் திங்கள்கிழமை பங்கேற்றன.   இதேபோன்று கோயம்புத்தூர்,  மதுரை, திருச்சி,  திருநெல்வேலி போன்ற அனைத்து மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.   
மாணவர்கள் போராட்டம்: ஈரோடு,  திருவண்ணாமலை உள்ளிட்ட  ஓரிரு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததைக் கண்டித்து அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களிடம் பள்ளி தலைமையாசிரியர்கள்,  கல்வித்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர். 
அடுத்து வரும் நாள்களில்... இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,  எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துப்பேச வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.  அதே நேரத்தில் போராட்டத்தை முடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அடுத்து வரும் நாள்களில் 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள்  ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்கவுள்ளன.  கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com