தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 29th January 2019 04:05 AM | Last Updated : 29th January 2019 04:05 AM | அ+அ அ- |

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அகமது தாக்கல் செய்த மனுவில், "காவல்துறையினர் சட்ட விரோத நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பிரகாஷ் சிங் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவின்படி, அனைத்து மாநிலத்திலும் மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். காவல்துறை டிஜிபிக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் நிர்ணயிக்க வேண்டும். வழக்குகளின் புலன் விசாரணைகளுக்காக தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். காவல்துறையில் பணிமாற்றம், பதவி உயர்வு குறித்து முடிவெடுக்க தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும். மேலும் காவல் துறையினர் மீது புகார் தெரிவிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் தனி ஆணையம் அமைக்க வேண்டும். கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுகள் 13 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தச் சட்டம் தமிழகத்தில் எந்த அளவு அமலில் இருந்து வருகிறது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.