ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்: விசிக வலியுறுத்தல்
By DIN | Published On : 01st July 2019 02:32 AM | Last Updated : 01st July 2019 02:32 AM | அ+அ அ- |

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சாதி ஆணவக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்திய சட்ட ஆணையம் ஒரு சட்ட மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் அளித்தது. அந்த மசோதா அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மத்திய பாஜக அரசு அதைச் சட்டமாக்கவே இல்லை. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசே கூட இதற்கான சட்டத்தை இயற்ற முடியும். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சிறப்புச் சட்டம் ஒன்றை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு இயற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.