மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள்: நிகழாண்டில் 64 ரயில்களில் இணைக்கத் திட்டம்

நிகழாண்டில் 64 ரயில்களில் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் கொண்ட பெட்டிகளுடன்  சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில்.
உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் கொண்ட பெட்டிகளுடன்  சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில்.


நிகழாண்டில் 64 ரயில்களில் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அனைத்துப் பெட்டிகளிலும் இருபுறமும் செல்லிடப்பேசி சார்ஜிங் செய்ய வசதி, தீயணைப்பு கருவிகள், துர்நாற்றம் இல்லாத நவீன கழிவறைகள் என பல்வேறு மேம்பாடுகள் இந்தப் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ளன. உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ், இந்த மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. 
இந்தத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் தரமான, மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்ட முதல் ரயிலாக சிலம்பு ரயில் உருவானது. இந்த ரயிலின் முதல் சேவை  சென்னை எழும்பூர்- செங்கோட்டைக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தரம் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட இரண்டாவது ரயிலாக தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரயில் அமைந்தது. இந்த ரயில் மே 8-ஆம் தேதி  மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த இரண்டு ரயில்களும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. 
 இந்த நிலையில், தரம் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட மூன்றாவது ரயிலாக சென்னை எழும்பூர்-கொல்லம் ரயில் அமைந்தது. இந்த ரயிலின் சேவை கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த ரயிலில் 2 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி,  8 குளிர்சாதனம் இல்லாத மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு பொது பயன்பாட்டு பெட்டிகள், இரண்டு நடத்துநர் பெட்டிகள் உள்பட 14 மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இடம்பெற்றன. இந்த ரயிலுக்கான பெட்டிகள் பெரம்பூர் கோச்சிங் மற்றும் வேகன் பணிமனை, பெரம்பூர் லோகோ பணிமனை மற்றும் பொன்மலை  பணிமனைகளில் பணிபுரியும் பொறியாளர்களால் மேம்படுத்தப்பட்டன.
சிறப்பு அம்சங்கள்:  இந்த ரயில் பெட்டிகளில் நவீன, துர்நாற்றம் இல்லாத வகையிலான கழிவறைகள், நீண்ட ஆயுள் கொண்ட வண்ணப்பூச்சு, நீர் தேங்கி நிற்காத வகையில் சாய்வு தரை அமைப்பு இடம்பெற்றிருக்கும். மேலும் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பெட்டிகளிலும் இருபுறமும் செல்லிடப்பேசி சார்ஜிங் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கும். பயணிகளின் பாதுகாப்புக்காக தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு புதிய தோற்றத்துடன் கூடிய இருக்கைகள் என பல்வேறு மேம்பாடுகள் இந்த ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: 
உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 64 ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.  இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 6 ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. சென்னை-மைசூர் காவிரி விரைவு ரயில் (சென்னை கோட்டம்), நாகர்கோவில் -ஷாலிமர் குருதேவ் விரைவு ரயில்  (திருவனந்தபுரம் கோட்டம்), கோயம்புத்தூர் -ராஜ்கோட் விரைவு ரயில் (சேலம் கோட்டம் ), மங்களூரு -திருவனந்தபுரம் மாவேலி விரைவு ரயில் ( பாலக்காடு கோட்டம்), கொச்சுவேலி-டேராடூன் விரைவு ரயில் (திருவனந்தபுரம் கோட்டம் ), தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில்  (திருச்சி கோட்டம் ) ஆகிய ரயில்களில் தரம் மேம்படுத்தப்படவுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com