பெருங்குடியில் 10 இலவச டயாலிசிஸ் கருவிகள்: இரண்டு மாதங்களில் அமைக்கத் திட்டம்
By DIN | Published On : 03rd July 2019 04:26 AM | Last Updated : 03rd July 2019 04:26 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 10 டயாலிசிஸ் கருவிகளை இரண்டு மாதங்களுக்குள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாதத்துக்கு 60 பேருக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின்கீழ், 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19 தாய் சேய் நல மையங்கள், 5 பகுப்பாய்வு மையங்கள், 2 போதை மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை, பயிற்சி மையம் ஆகியவை செயல்படுகின்றன.
இதில், அண்ணாநகர் மண்டலத்தில் ஈவெரா பெரியார் சாலை, தேனாம்பேட்டை மண்டலத்தில் வள்ளுவர் கோட்டம், அடையாறு மண்டலத்தில் திருவான்மியூர், கோடம்பாக்கம் மண்டலத்தில் சைதாப்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலத்தில் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பகுப்பாய்வுக் கூடங்கள், கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரத்த சுத்திகரிப்பு வசதி, இ.சி.ஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில், 5 பகுப்பாய்வுக் கூடங்களில் ஒரு சில கூடங்களில்தான் டயாலிசிஸ் வசதி உள்ளது. எனவே மற்ற மையங்களிலும் இந்த வசதியை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இலவச மையம்: இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், பெருங்குடி மண்டலத்தில் உள்ள சிறுநீரகம் செயழிலந்த மக்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் 10 டயாலிசிஸ் கருவிகள் வாங்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களில் செயல்படவுள்ள இந்த மையத்தில் ஒரு நோயாளிக்கு மாதத்துக்கு 8 முறை டயாலிசிஸ் வீதம் 60 நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படும். டேங்கர் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ள இந்த மையத்தில் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம், அமைந்தகரை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இலவச டயாலிசிஸ் மையங்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல், ரூ. 11 கோடி மதிப்பில் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மெம்மோகிராம் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.