அடிப்படை வசதிகள் இல்லாத அமைந்தகரை காய்கறிச் சந்தை: அவதியில் வியாபாரிகள்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அமைந்தகரை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காய்கறிச் சந்தையில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி
அடிப்படை வசதிகள் இல்லாத அமைந்தகரை காய்கறிச் சந்தை: அவதியில் வியாபாரிகள்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அமைந்தகரை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காய்கறிச் சந்தையில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட அமைந்தகரை 102ஆவது வார்டு திரௌபதி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அமைந்தகரை காய்கறிச் சந்தை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருந்த அமைந்தகரை காய்கறிச் சந்தை, சென்னையில் கொத்தவால்சாவடிக்கு அடுத்த பெரிய சந்தையாக விளங்கியது. 
இந்தச் சந்தைக்கு ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரத்தில் இருந்த காய்கறிக் கடைகள் அகற்றப்பட்டதாலும், கொத்தவால்சாவடியில் இருந்து கோயம்பேடு பகுதிக்கு காய்கறிச் சந்தை மாற்றப்பட்டதாலும், அமைந்தகரை சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இதையடுத்து, இங்கிருந்த சுமார் 100 கடைகள் திரௌபதி அம்மன் கோயில் தெரு, ஷெனாய் நகர் செல்லும் சாலையின் ஓரத்திலும் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தச் சந்தைக்கு அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், டி.பி.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தச் சந்தையில் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
செயல்படாத கழிப்பிடம்: இதுகுறித்து அமைந்தகரை சந்தை வியாபாரிகள் கூறுகையில், திரௌபதி அம்மன் கோயில்  சாலையில் சந்தை மாற்றப்பட்ட பிறகு, மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 4 பெண்கள், 4 ஆண்கள் உபயோகப்படுத்தும் வகையில் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், கழிவுநீர் வெளியேறுவதற்கான முறையான அமைப்பு இல்லை எனக் கூறி அந்தக் கழிப்படம் திறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கழிப்பிடம் மீண்டும் புனரமைக்கப்பட்டு இதுவரை மக்கள் செயல்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. 
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது, கழிவுநீர் வெளியேறுவதற்கான அமைப்பு அங்கு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், திறக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். நீண்ட காலமாக இந்தச் சந்தையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் கழிப்பிடம், குடிநீர் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து அண்ணா நகர் மண்டல அலுவலர் எம்.பரந்தாமன் கூறுகையில், அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் சாலையில் கழிப்பறை பூட்டிக் கிடப்பது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

கிடங்காக மாறிய கழிப்பிடம்
இந்தச் சந்தையில் வியாபாரம் செய்யும் சில வியாபாரிகள் காய்கறிகளை மூட்டையாக கட்டி இரவு நேரத்தில் இந்தக் கழிப்பிடத்தில் வைத்துவிட்டுச் செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தைக்கு அருகில் உள்ள தனியார் மீன் சந்தையில் முறையாக கழிவுகள் அகற்றப்படாததால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com