நகை, பணம் திருட்டு: இருவர் கைது
By DIN | Published On : 13th July 2019 04:27 AM | Last Updated : 13th July 2019 04:27 AM | அ+அ அ- |

சென்னை அடையாறு, வேளச்சேரி பகுதியில் 14 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு, சாஸ்திரிநகர், வேளச்சேரி, குமரன் நகர், செம்மஞ்சேரி, கானத்தூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து, நகை, பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன. இத் திருட்டில் ஈடுபடும் நபர்கள், கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில் கைவரிசையை காட்டி வந்ததால், போலீஸார் துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் இத் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள அவனியாபுரத்தைச் சேர்ந்த வ.கமலகண்ணன் (30), திருச்சி செக்கடி பஜார் வடக்குத் தெருவைச் சேர்ந்த வி.தட்சிணாமூர்த்தி என்ற அனாதி (44) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 90 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள், இதுவரை 14 வீடுகளின் கதவு பூட்டை உடைத்து, திருடியிருப்பது தெரியவந்துள்ளது.