சுடச்சுட

  

  சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114-ஆவது ஆண்டு விழா 3 நாள் மாநாடு: 19-இல் பழநியில் தொடக்கம்

  By DIN  |   Published on : 14th July 2019 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114-ஆவது ஆண்டு விழா மாநாடு பழனியில், வரும் 19-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
   இது குறித்து, பழநி ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சாது சண்முக அடிகளார் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   இளைஞர்கள் வரும் காலங்களில் சமய பண்பாடு, சமய கொள்கைகளை முழுமையாக அறிந்து கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதற்கு பண்பாடுடன் கூடிய கல்வி நமக்குத் தேவை. நாளுக்கு நாள் இது குறைந்து வருவதால் தற்போதைய தொழில்நுட்பம் இளைஞர்களை தடம்புரள வைத்துவிடும். எனவே இளைஞர்களை நல்வழிப் படுத்துவதற்காகவே மாநாடுகள், வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
   இளைஞர்களை மையமாக வைத்து பழனி ஆதீனம் தவத்திரு சாது சுவாமிகள் திருமடம் மற்றும் சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில், மன்றத்தின் ஞானியார் அடிகள் கடந்த 1905-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கிய சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114-ஆவது ஆண்டு விழா மாநாடு, பழநியில் வரும் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
   இந்த மாநாடு பழநியில் இழுவை மலை ரயில் அருகில் உள்ள சாது சுவாமிகள் கலையரங்கத்தில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். பாம்பன் சுவாமிகள், வள்ளலார் திருவருட்பா உள்ளிட்ட அருள் நூல்களை எடுத்துக் கொண்டு பழநிமலையை வலம் வந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
   தத்துவ மாநாடு, வளர்ச்சி மாநாடு, சைவர்-மகளிர்- இளைஞர் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் சைவத்தை வளர்த்து வருபவர்களுக்கு சைவ சமயக் காவலர், சைவ சித்தாந்தக் காவலர், சைவ பெருமன்றக் காவலர் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.
   மாநாட்டின் இரண்டாவது நாளான 20-ஆம் தேதி சைவ சித்தாந்த தத்துவம் உலக அளவில் வளர்த்தெடுக்கப்படாமல் போனது ஏன்?, எந்ததெந்த முறைகளில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற பொருளில் வளர்ச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
   பிற்பகலில் நூல்கள் வெளியீட்டு விழாவும், மொழி, பண்பாடு, சைவம் என்ற தலைப்பில் அடையாள மாநாடும் நடைபெறவுள்ளது. மாநாட்டின் 3-ஆம் நாளான 21-ஆம் தேதி சைவர்- மகளிர்- இளைஞர் மாநாடு நடைபெறும். அன்றை தினம் பிற்பகல் நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், தெ.கிருஷ்ணகுமார், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, உலகத் தமிழ் பேரவையின் நிறுவனர் பழ.நெடுமாறன், தமிழறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
   மாநாட்டுக்கு வருவோர் நமது பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலையும் அணிந்திருக்க வேண்டும். மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றார். பேட்டியின்போது சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவரும், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை தலைவருமான நல்லூர் சா.சரவணன் இருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai