24,699 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை: ஆணையர் ஜி.பிரகாஷ்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதுநாள் வரை 53,847 கட்டடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 24,699 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதுநாள் வரை 53,847 கட்டடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 24,699 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.
 சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வார்டுகளில் வார்டுக்கு 1,000 வீதம் 200 வார்டுக்கு 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வார்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தெருவாரியாக கட்டடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணையர் ஜி.பிரகாஷ் பேசியது: 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குவதற்கான இலக்கை எட்டும் வகையில் பொது, தனியார் கட்டடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்புக் குழுக்களால் 200 வார்டுகளில் இதுநாள் வரை 53,847 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 அதில் 24,908 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதும், 4,240 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 24,699 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்தக் கட்டட உரிமையாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக அமைக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள 23 சமுதாயக் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கிணறுகளைப் புனரமைத்து மறுபயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 கூட்டத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி இணை ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com