நாளை உலக இளைஞர் திறன் நாள்: 21 நகரங்களில் புதிய படிப்புகள் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்

உலக இளைஞர் திறன் நாள் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அன்றைய தினம் சரக்கு மேலாண்மையுடன்
நாளை உலக இளைஞர் திறன் நாள்: 21 நகரங்களில் புதிய படிப்புகள் அறிமுகம்; மத்திய அமைச்சர் தகவல்

உலக இளைஞர் திறன் நாள் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அன்றைய தினம் சரக்கு மேலாண்மையுடன் கூடிய பி.காம், பி.பி.ஏ படிப்புகள் நாட்டில் 21 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே கூறினார்.
 இது தொடர்பாக அவர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
 "நிமி' எனப்படும் தன்னாட்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கான புத்தகம், காணொலிகள், ஒலி நாடாக்கள் என கற்றல்- கற்பிப்பதற்கான உபகரணங்கள் தயார் செய்யப்படுகின்றன. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் காணவும், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் 14- ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சென்னை வந்துள்ளேன்.
 இந்தக் கூட்டம் தற்போதுதான் முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.
 மத்திய அரசின் முயற்சியால் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டத்தின் கீழ், பெண்களுக்குத் தொழில் தொடங்க பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். அதே போல், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 ஜூலை 15-ஆம் தேதி உலக இளைஞர் திறன் நாள் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாகபுரியில் முதல் முறையாக வானூர்தி பொறியியல் குறித்த பட்டயப்படிப்பு தொடங்க உள்ளோம்.
 இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார். பின்னர் இந்தப் படிப்பு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கற்பிக்கப்படும்.
 அன்றைய தினமே மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகமும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து 21 நகரங்களில் சரக்கு மேலாண்மையுடன் கூடிய பி.காம், பி.பி.ஏ படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தப் படிப்புகள் யுஜிசி அங்கீகாரம் பெற்றுள்ளன. 3 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும் இந்தப் படிப்புகளில் 6 மாதம் களப் பயிற்சியும் மற்றும் 6 மாதம் வகுப்பறைக் கல்வி என்ற முறையில் பயிற்றுவிக்கிறோம். அந்த 6 மாத கால களப்பயிற்சியின் போது அவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். இந்தப் படிப்புகளில் வேலைவாய்ப்புக்கு உறுதி.
 உலகத் திறன் போட்டியில் தமிழக மாணவர்கள்: பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 31 ஆயிரத்து 964 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 24 ஆயிரத்து 278 பேர் பயிற்சி முடித்துள்ளனர். ரஷிய நாட்டில் கசான் நகரில் நடைபெறும் உலக திறன் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 45 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தப் போட்டியில் பங்கு பெற தமிழகத்தைச் சேர்ந்த தஸ்லீம் மொகைதீன், விஸ்வநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
 நிகழ்வில் தொழிலாளர் நலத் துறை செயலர் சுனில் பாலிவால், துறையின் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com