மருந்து கடையில் ஊசி போட்டு கொண்டவர் மரணம்: ஊழியர் கைது
By DIN | Published On : 24th July 2019 04:25 AM | Last Updated : 24th July 2019 04:25 AM | அ+அ அ- |

அம்பத்தூரில் மருந்துக் கடையில் ஊசி போட்டுக் கொண்ட தொழிலாளி உயிரிழந்தார். இதையடுத்து கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கொரட்டூர் அருகே உள்ள மாதனாங்குப்பம் கலெக்டர் நகர் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரா.குமார் (43), தையல் தொழிலாளியான இவருக்கு தோள்பட்டையில் வலி இருந்துள்ளது. இதையடுத்து அம்பத்தூர் சண்முகம் பிரதான சாலையில் உள்ள மருந்துக் கடைக்கு அவர் சென்றார். அந்தக் கடையின் ஊழியர் பாஸ்கரன்(52), தோள்பட்டை வலிக்கு ஊசி மருந்து போட்டு, மாத்திரை சாப்பிட்டால் உடனடியாக சரியாகும் என தெரிவித்தாராம். இதைக் கேட்ட குமார், அதற்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து பாஸ்கரன், ஊசி மூலம் குமாருக்கு மருந்து செலுத்தினாராம். இதையடுத்து வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த குமார், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை கைது செய்தனர்.