Enable Javscript for better performance
இரண்டு ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் மாநகராட்சி கழிப்பறைகள்- Dinamani

சுடச்சுட

    

    இரண்டு ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் மாநகராட்சி கழிப்பறைகள்

    By DIN  |   Published on : 25th July 2019 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiolet


    பெருநகர சென்னை மாநகராட்சியின் தியாகராயர் நகருக்கு உள்பட்ட அன்பு காலனி நுழைவாயில்  பகுதியில் உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிப்பறைகள்  பயன்படுத்த  முடியாத நிலையில் உள்ளன.
    சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தியாகராய நகர் பகுதியில் தென்மேற்கு பேக் சாலைக்கு அருகே டேங்க்பண்ட், அன்பு காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
    இதில், அன்பு காலனி நுழைவாயிலில் மாநகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இலவசக் கழிப்பறைக் கட்டப்பட்டது. இந்தக் கழிப்பறைகளை அன்பு காலனி மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தொடக்கத்தில் நல்ல முறையில் கழிப்பறைகளைப் பராமரித்து வந்த மாநகராட்சி நிர்வாகம், நாள்கள் செல்ல செல்ல பராமரிப்பைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால்,  அவற்றைப் பயன்படுத்த முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கிறது.
    இந்நிலையில், இந்தக் கழிப்பிடத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட இ-டாய்லெட்டிலும் உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது, அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அன்பு காலனி மக்கள், அருகில் உள்ளவர்கள், அப் பகுதி வழியே செல்லும்  பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  அன்பு காலனி நுழைவாயிலில் கட்டப்பட்ட இலவசக் கழிப்பறையை மாநகராட்சி முறையாகப் பராமரிக்காததால், அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு அந்தக் கழிப்பறைக்கு அருகிலேயே இ-டாய்லெட் திறக்கப்பட்டது. ஆனால், அதற்குத் தேவையான தண்ணீர் வசதியை மாநகராட்சி செய்யவில்லை.  இதனால், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இ-டாய்லெட்டையும் பயன்படுத்த முடியவில்லை.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.
    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. உடனடியாக அப்பகுதியில் ஆய்வு நடத்தி கழிப்பிடங்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai