Enable Javscript for better performance
பல்லாவரத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம்- Dinamani

சுடச்சுட

    


    சென்னை பல்லாவரத்தில் புதைகுழிச் சாக்கடை குழாய் அடைப்பு காரணமாக வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
    இதனால், பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட குரோம்பேட்டை நியூ காலனி, நாகப்பா நகர், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. 
    பல்லாவரம் நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட வீடுகளில் இருந்து தினமும் சராசரியாக வெளியேற்றப்படும் 90 லட்சம் லிட்டர் கழிவுநீர், பல்லாவரம் ரேடியல் சாலை ஓரமாக 4.25 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான புதைகுழிச் சாக்கடை குழாய் மூலம் கீழ்கட்டளையில் உள்ள கழிவு நீரேற்றும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பிரதான புதைகுழிச் சாக்கடைக் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் திறந்து பழுது பார்ப்பதற்கென நூறு அடி தூரத்துக்கு ஒன்று வீதம் 86 ஆள்நுழை துவாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    தற்போது பல்லாவரம் ரேடியல் சாலையை அகலப்படுத்தும் பணியை சாலையோரமாக உள்ள பிரதான புதைகுழிச் சாக்கடைக் குழாய் மீது நெடுஞ்சாலைத் துறை தொடங்கி உள்ளது. சாக்கடைக் குழாய் அடைப்பைச் சரிபார்ப்பதற்கென அமைக்கப்பட்டு இருந்த ஆள் நுழை துவாரங்கள் மூடப்பட்டு, அதன் மீது சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
    ஆள்நுழை துவாரங்கள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், சாலை உயரத்துக்கு ஆள்நுழை துவாரங்களை உயர்த்தித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆள்நுழை துவாரங்கள் அமைக்க போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி மறுத்துவிட்டனர்.
    இதுகுறித்து நகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது, பிரதான புதைகுழி சாக்கடை குழாய் மீது சாலை அமைக்கும் போது எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
    பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள பிரதான புதைகுழி சாக்கடைக் குழாய் மீது 10 அடி உயரத்துக்கு சாலை அமைக்கும் போது சிமெண்டு சாக்கடைக் குழாய் உடைந்து சேதம் அடைய வாய்ப்புள்ளது. 
    எங்கு அடைப்பு, பழுது ஏற்பட்டு உள்ளது என்று இறங்கி சீரமைக்க அமைக்கப்பட்டு இருந்த ஆள்நுழை துவாரங்களும் மூடப்பட்டு விட்ட நிலையில், எதிர்பாராமல் புதைகுழிச் சாக்கடைக் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால், கழிவுநீர் வெளியேற வேறு வழியின்றி வீடுகளுக்குள் கழிவுநீர் திரும்ப புகுந்து விடும் அபாயமுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai