Enable Javscript for better performance
பி.வி.களத்தூர் அருகே சுரங்கப்பாதை: 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது- Dinamani

சுடச்சுட

    

    பி.வி.களத்தூர் அருகே சுரங்கப்பாதை: 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது

    By மு. வேல்சங்கர்   |   Published on : 25th July 2019 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tunnel


    செங்கல்பட்டு-ஒட்டிவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே  பி.வி.களத்தூர் அருகில் மிகப்பெரிய சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 75 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை முடித்து, மூன்று மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை திறக்கப்படுவது மூலமாக,  இங்குள்ள ரயில்வே பாதையில்  பொதுமக்கள் நெடுநேரம் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.
    காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் பி.வி. களத்தூர் அருகில் மோசிவாக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. அதாவது ஒட்டிவாக்கம்-செங்கல்பட்டு ரயில்நிலையங்களுக்கு இடையே இந்த ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. மோசிவாக்கத்தில் இருந்து செல்லும் மக்கள் இந்த தண்டவாளத்தை கடந்து தான்  செங்கல்பட்டுக்கு செல்ல வேண்டும். ரயில்கள் அடிக்கடி செல்லும்போது, ரயில்வே பாதை அடைக்கப்படுவதால், மக்கள் நெடுநேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. 
    இதனால், மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாய தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் இந்த தண்டவாளத்தை கடந்து செல்வது அவர்களுக்கு ரொம்ப கடினமாக இருக்கிறது. அவசர காலத்தில், 6 கி.மீ. தூரம்  சுற்றி செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
    மக்கள் கோரிக்கை: இதற்கிடையில், இந்த தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று, அதற்கான பணியைத் தொடங்க முடிவு செய்தது. இதையடுத்து, சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. வழக்கமாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றால், 3.6 மீட்டர் அகலமும், 2.7 மீட்டர்  உயரமும் இருக்கும். ஆனால், இந்தப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க 4.5 மீட்டர் அகலமும், 4.5 மீட்டர் உயரமும் எடுத்துகொள்ளப்பட்டது. அதன்பிறகு பணிகள் வேகமெடுத்தன. 
    70 சதவீத பணிகள் நிறைவு: சுரங்கப்பாதை அமைக்க பூமியை தொண்டும் போது, கீழே அதிக அளவில் பாறைகள் இருந்தன. இதை அகற்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து பூமியைத் தொண்டி, பாறைகளை அகற்றும் பணி ஜூன்  மாதம் 23-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 8-ஆம் தேதி  நடந்தது. அப்போது, ரயில் சேவை பாதிக்காத வகையில், இந்தப் பகுதியில் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. மேலும், ரயில்கள் 20 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. 14 வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் பெட்டிகள் இங்கு நிலைநிறுத்தி வைக்கப்பட்டன. இதற்காக நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இங்கு தற்போது 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    நேரம் சேமிக்கப்படும்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: மோசிவாக்கம், கண்டிக்கை, பி.வி.களத்தூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, மோசிவாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல இந்த ரயில்வே வாயிலை கடந்து செல்ல காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், அவர்களின் நேரம் சேமிக்கப்படும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நெல் கதிரடிக்கும் எந்திரத்தை சுரங்கப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முடியும். சுரங்கப்பாதை மூலமாக மக்களின் சிரமங்கள் தவிர்க்கப்படும். 
    அக்டோபரில் பணி முடியும்: சுரங்கப் பாதைகள் வழக்கமாக  ஒரு கார் செல்லும் அளவுக்கு அமைக்கப்படும். இப்போது, அமைக்கப்படும் சுரங்கப்பாதை அதை விட மிகப்பெரியது. வழக்கமாக  ரூ.1.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். ஆனால், இங்கு  ரூ.2 கோடியில் சுரங்கப்பாதை பணி நடைபெறுகிறது.  கடந்த 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை  முக்கியப் பணிகள் இரு மார்க்கத்திலும் நடைபெற்றன. இதற்காக இரவு பகலாக பணிகள் நடந்தன. அப்போது, ரயில் சேவை பாதிக்காத வகையில் நடைபெற்றது.  மீதமுள்ள பணிகளை முடித்து, மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

    ஒட்டிவாக்கம்-செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai