Enable Javscript for better performance
புதுப்பொலிவு பெறும் மாநகராட்சிப் பள்ளிகள்: மாணவர்களை ஈர்க்க புதிய திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுப்பொலிவு பெறும் மாநகராட்சிப் பள்ளிகள்: மாணவர்களை ஈர்க்க புதிய திட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் வகுப்பறையில் அதிநவீன வசதிகள், பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான வண்ணம் உள்ளிட்ட பல்வேறு தனித்துவமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மொத்தம் 83,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    கடந்த 2018-19-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 21 மாநகராட்சிப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தன. அதேபோல், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதுடன்,  4 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தன.
    இந்நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 281 பள்ளிகளில் அதிநவீன வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தனித்துவமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    தனித்துவமான உள்கட்டமைப்பு: இதுகுறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 
    மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டைக் காட்டிலும் இந்தக் கல்வி ஆண்டில் இதுவரை 1,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இதை வரும் கல்வி ஆண்டில் உயர்த்தும் வகையில், பள்ளிகளில் தனித்துவமான உள்கட்டமைப்பு வசதிகள், கல்வித் திட்டத்தில் மேம்பாடு, ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி ஆகியவை அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கென குழு அமைக்கப்பட்டது.
    இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, மாநகராட்சிப் பள்ளிகளின் வகுப்பறையில் இரண்டு மின்விசிறிகள், நான்கு மின் விளக்குகள், வகுப்பறை சுவர்களில் தரையில் இருந்து 5 அடிக்கு அழுக்குப் படியாத வகையில் வண்ணப் பூச்சு, பாதுகாப்பான குடிநீர், நவீன கழிவறை மற்றும் பள்ளிகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் தொடக்கப் பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே வண்ணம். அதேபோல், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு  ஒரே வண்ணம் பூசப்பட உள்ளது. மேலும், பள்ளிகளின் சுற்றுச்சுவர், நுழைவாயில் கதவு ஆகியவை ஒரே மாதிரி வடிவமைக்கப்பட உள்ளன. எந்தெந்தப் பள்ளிகளுக்கு எந்தெந்த வண்ணம் ஆகியவை விரைவில் முடிவு செய்யப்பட்டு செப்டம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai