Enable Javscript for better performance
மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் இருவர் இடைநீக்கம்: கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் இருவர் இடைநீக்கம்: கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சென்னையில் மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்திகளுடன் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் இருவரை பச்சையப்பன் கல்லூரி இடைநீக்கம் செய்துள்ளது.
    சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று மாநகரப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளுடன் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர். சென்னையில் பரபரப்பான பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால், பொதுமக்கள் பீதியடைந்ததுடன் சக பேருந்து பயணிகளும், பிற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
    இந்த மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த இருவரையும், கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
    இதுகுறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் புதன்கிழமை அளித்த பேட்டி:
    மாநகரப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் விவரங்களை காவல்துறையிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில், இரு மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ளோம். 
    அதன் பின்னர், அந்த மாணவர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் விளக்கம் கேட்கப்படும். அதன் பேரில், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    இதுவரை, இதுபோன்ற மோதலில் ஈடுபட்ட 26 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீதான நடவடிக்கை தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் கல்லூரிக்கு வர அனுமதி அளித்திருக்கிறோம். மற்ற மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து இடை நீக்கத்திலேயே உள்ளனர்.
    மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்ற மோதலில் ஈடுபடுவதைத் தடுக்க கல்லூரி சார்பில் தீவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்களைக் கண்காணிக்க பேராசிரியர்களைக் கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர், தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சோதனை செய்து, அவர்கள் வகுப்பறைக்குச் செல்வதை உறுதி செய்து வருகின்றனர்.
    அதுபோல, மோதலில் ஈடுபட்டு இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாகும் மாணவர்களுக்கு ஆலோசனைகளும் கல்லூரி சார்பில் வழங்கப்படுகிறது. இதில் தவறை உணரும் மாணவர்களுக்கு மட்டுமே, கல்லூரிக்கு மீண்டும் வர அனுமதி அளிக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாணவர்கள் கல்லூரிக்குள் மோதலில் ஈடுபடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது.
    கல்லூரிக்கு வெளியேயும், மாணவர்களின் மோதலைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து தீவிர முயற்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
    மாணவர்கள் இதுபோன்ற மோதலிலும், ரகளையிலும் ஈடுபட அவர்களின் குடும்பச் சூழலும் ஒரு காரணம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai