கல்லூரிக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு போக்குவரத்தை சரிசெய்யும் தண்டனை: மோதலைத் தடுக்க நூதன திட்டம்

மாணவர்களிடையேயான மோதலைக் கட்டுப்படுத்த, கல்லூரிக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்துவது போன்ற நூதன தண்டனைகளை வழங்க காவல்துறையும், கல்லூரி


மாணவர்களிடையேயான மோதலைக் கட்டுப்படுத்த, கல்லூரிக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்துவது போன்ற நூதன தண்டனைகளை வழங்க காவல்துறையும், கல்லூரி நிர்வாகத்தினரும் முடிவெடுத்துள்ளனர்.
மாநகரப் பேருந்துகளில் நடைபெறும்  கல்லூரி மாணவர்களின் ரகளை, சென்னைவாசிகளின் தீர்க்க முடியாத பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பணிக்குச் செல்லும் காலை நேரத்தில், இவர்களின் ரகளைகளுக்கு இடையே பெரும் அச்சத்துடனே தினமும் பயணித்து வருவதாக, பிற பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் 4 பேர், சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகும், மாணவர்களின் பேருந்து படிக்கட்டு பயணம், பேருந்தில் மாணவர் மோதல் சம்பவங்கள் தொடர்ந்ததால் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த உயர்நீதிமன்றம், இதற்கு உரிய தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா ஜெயராமன் தலைமையில் 3 பேர் குழு ஒன்றை அமைத்து. 
அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைப்பது, கல்லூரி நிர்வாகிகள்-போலீஸ்-போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது. இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டது.
ஆனால், இந்தப் பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. அதன் காரணமாகவே பேருந்துகளில் மாணவர் மோதல்களும், படிக்கட்டு பயணமும் தொடர்கிறது என்கின்றனர் பேராசிரியர்கள்.
இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரப் பேருந்தில் பயணித்த சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்திகளுடன் அவர்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களில் இருவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
இந்த நிலையில், தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் காவல்துறை அதிகாரிகள், பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் புதுக் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நூதன தண்டனை: இதில், அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களை மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும்; சரியான நேரத்துக்குள் வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; கால தாமதமாக வரும் மாணவர்களுக்கும், பேருந்தில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கும் போக்குவரத்தை சரிசெய்யும் பணி போன்ற நூதன தண்டனைகளை வழங்குவது; கவுன்சிலிங் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநகரப் பேருந்து ஓட்டுநர்களை வரவழைத்து, இதுபோன்று மாணவர்கள் ரகளையில் ஈடுபடும்போது எவ்வாறு நடந்து கொள்வது, போலீஸாருக்கு உடனடியாக புகார் தெரிவிக்கவேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கவும், புகார் எண்ணை மாநகரப் பேருந்துகளில் ஒட்டவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, அதில் பங்கேற்ற மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.

மாணவர்கள் மட்டும்தான் காரணமா...?
மாணவர்கள் இதுபோன்று ரகளையில் ஈடுபடுவதற்கு அவர்கள் மட்டுமே காரணமில்லை என பேராசிரியர்கள் சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியது:
கடந்த சில மாதங்களாக மாநிலக் கல்லூரி மாணவர்கள், புதுக் கல்லூரி மாணவர்களும் ரகளையில் ஈடுபடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், எங்களுடைய கல்லூரி மாணவர்கள் மட்டும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலேயே, மாணவர்கள் இதுபோன்று ரகளையில் ஈடுபடுகின்றனர். இதற்கு சில பேராசிரியர்களின் தூண்டுதலும் முக்கியக் காரணம். தங்களின் சுயநலத்துக்காக, ஒரு சில பேராசிரியர்கள் மாணவர்களைத் தூண்டி விடும் நிகழ்வும் இங்கு அரங்கேறி வருகிறது. ஜாதி ரீதியிலும் மாணவர்கள் தூண்டிவிடப்படுகின்றனர். மேலும், கல்லூரியில் பெரும்பாலான வகுப்புகள் நடைபெறுவதே இல்லை. பல துறைகளில் பகல் 12  மணிக்கு மேல் பேராசிரியர்கள் இருப்பதே இல்லை. இத்தகைய சூழலில், மாணவர்களிடம் எப்படி ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்.
எனவே, மாணவர்களை மட்டும் குறை கூறிவிட முடியாது. மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதற்கு முன்பாக, மாணவர்களைத் தூண்டிவிடும் பேராசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முதலில் கவுன்சலிங் வழங்கவேண்டும். அப்போதுதான், மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதை உண்மையில் கட்டுப்படுத்த முடியும் என்றனர்.
இதுகுறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் கூறியது:
மாணவர்களை பேராசிரியர்கள் தூண்டிவிடுவதாகக் கூறுவது தவறான தகவல். மேலும், பேராசிரியர்கள் அனைவரும் கல்லூரி நேரம் முடிந்த பிறகே,  கிளம்பிச் செல்கின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com