சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர 3-ஆவது ரயில்: சாத்தியக் கூறுகள் ஆய்வு

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர 3-ஆவதாக ரயிலை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர 3-ஆவதாக ரயிலை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் (ஒரு கோடி லிட்டர்) காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ரயில்களில் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் 100 வேகன்களில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 50 வேகன்களில் குடிநீர் நிரப்புவதற்கு மூன்றரை மணி நேரம் தேவைப்படுவதால், இந்த நேரத்தைக் குறைத்து 3 மணி நேரத்துக்குள் தண்ணீர் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அதன் அடிப்படையில், ஜோலார்பேட்டை நகராட்சிக்குள்பட்ட மேட்டுச் சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து ரயில் வேகன்களுக்கு குடிநீர் நிரப்பும் இடம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 11 வளைவுகள் உள்ளதால் நீரின் வேகம் குறைந்து வேகன்களில் நிரப்பும் நேரம் மூன்றரை மணி நேரம் ஆகிறது.
விரைவாக குடிநீர் நிரப்புவதற்காக 11 வளைவுகள் கொண்ட குழாயை 6 வளைவுகளாக குறைத்தால் குடிநீர் நிரப்பும் நேரம் குறைந்துவிடும். இதற்கான வழிமுறைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,  சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றால்தான் அங்குள்ள தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முடியும். இப்போது 2 ரயில்களையும் ஒரு தடவை மட்டுமே இயக்க முடிகிறது. ஒரு ரயில் தண்ணீர் நிரப்பி, இறக்கி சென்னை சென்று வர 16 மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறோம்.
வேகன்களை சேகரிக்கும் பணி:  சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்கு வகையில் மூன்றாவது ரயிலை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரயில் போக்குவரத்தில் எந்தவித தடங்கலும், பாதிப்பும் ஏற்படாத வகையில் 3 ரயில்களையும் எவ்வளவு நேர இடைவெளியில் இயக்குவது, 3 ரயில்களையும் சுழற்சி முறையில் இயக்கினால் நீர் விநியோகம் செய்ய முடியுமா? என்று ஆய்வு செய்யப்படுகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com