முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 04:35 AM | Last Updated : 30th July 2019 04:35 AM | அ+அ அ- |

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை சரியாக பதிவு ஏற்றாத கிராம சுகாதார செவிலியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை சரியாக பதிவு ஏற்றாத கிராம சுகாதார செவிலியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பரமேஸ்வரி கூறியது: இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க அயராது உழைத்து வரும் எங்களை, தமிழக அரசு வஞ்சித்து வருவது வருந்தத் தக்கச் செயலாகும். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை சரியாக பதிவு ஏற்றாத கிராம சுகாதார செவிலியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, எங்களுக்கு கடும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய சேவையை அவமதிப்பதோடு மட்டுமல்லாமல், துறையின் பல்வேறு தளங்களில் ஏற்படும் கால தாமதங்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மீது வீண்பழி சுமத்துவது சரியல்ல.
இந்த அறிவிப்பை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாலை 5 மணிக்கு பின்னர் ஆய்வுக்கூட்டம் நடத்துவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொது சுகாதாரத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எங்களுடைய சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார் என்றார் அவர்.