முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை: அக்.15 -க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 30th July 2019 04:33 AM | Last Updated : 30th July 2019 04:34 AM | அ+அ அ- |

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு, அக்டோபர் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், நிகழாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில்வோருக்கு மேற்படிப்புக்கான உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர். உதவித் தொகையானது மாணவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வரையிலும், மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் மாணவர்களின் முழுமையான தகவல்களை பதிவு செய்வதோடு, மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளத்தில் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றம், திருத்தம் செய்ய இயலாது.
விண்ணப்பங்களை இணையம் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.