முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
நந்தனத்தில் போக்குவரத்து மாற்றம் நீடிக்கும்
By DIN | Published On : 30th July 2019 04:33 AM | Last Updated : 30th July 2019 04:33 AM | அ+அ அ- |

சென்னை நந்தனத்தில் கடந்த 26-ஆம் தேதி செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் நீடிக்கும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்: சென்னையில் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, கடந்த 2012-ஆம் ஆண்டு நந்தனம் அண்ணாசாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதில் அண்ணா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அதேபோல அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.
இந்நிலையில் மெட்ரோ ரயில் பணி முடிந்து, அண்மையில் அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டன. இதன் விளைவாக கடந்த 26-ஆம் தேதி முதல் சோதனை ஓட்டமாக, நந்தனம் அண்ணா சாலை சந்திப்பு பகுதி மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகளிடம் கடும் வரவேற்பு கிடைத்தது. இதன் விளைவாக, இப்போது செய்யப்பட்டிருக்கும் போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து நீடிக்கும் என சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தது.