பார் கவுன்சில் தேர்தல்: பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி
By DIN | Published On : 30th July 2019 04:36 AM | Last Updated : 30th July 2019 04:36 AM | அ+அ அ- |

தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வழக்குரைஞர்
பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். இதே போன்று துணைத் தலைவராக வி.கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக எஸ்.பிரபாகரனும் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 198 வழக்குரைஞர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் போட்டியிட்ட பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, கே.பாலு, ஜி.மோகனகிருஷ்ணன், வி.கார்த்திகேயன், எம்.வேல்முருகன், டி.செல்வம், ஆர்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேர்தல் அதிகாரியான பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் முன்னிலையில் நேற்று நடந்தது.தேர்தல் பார்வையாளராக உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சி.காண்ட்பால் பங்கேற்றார்.
இந்த தேர்தலில் பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு பி.எஸ்.அமல்ராஜும், ஆர்.சி.பால்கனகராஜும் போட்டியிட்டனர். இதில் பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். இதேபோல துணைத் தலைவர் பதவிக்கு வி.கார்த்திகேயன், எம்.வேல்முருகன், மற்றும் ஆர்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் வி.கார்த்திகேயன் வெற்றி பெற்றார். மேலும் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு எஸ்.பிரபாகரனும், டி.செல்வமும் போட்டியிட்டனர். இதில் எஸ்.பிரபாகரன் மீண்டும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக வெற்றி பெற்றார்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரியான சி.ராஜகுமார் கூறியதாவது:
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அகில இந்திய பார் கவுன்சிலுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பு வந்த பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டு அதன்பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பார் கவுன்சில் நிர்வாகிகளாக பொறுப்பேற்பார்கள் என்றார்.