ரூட் தல மாணவர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண்: சென்னை காவல்துறை அறிமுகம்

சென்னையில் ரூட் தல மாணவர்கள் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண்ணை பெருநகர காவல்துறை அறிமுகம் செய்தது.


சென்னையில் ரூட் தல மாணவர்கள் என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண்ணை பெருநகர காவல்துறை அறிமுகம் செய்தது.
சென்னை அரும்பாக்கத்தில் அரசு பேருந்தில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த 23-ம் தேதி பட்டாக் கத்தியுடன் மோதிக் கொண்டனர். இச் சம்பவத்தில் ஒரு மாணவர் பலத்தக் காயமடைந்தார்.  இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 6 மாணவர்களை கைது செய்தனர்.
இதேபோல மாணவர்கள் பொது இடங்களில் இடங்களில் மோதிக் கொள்வதை தடுக்கும் வகையிலும், பேருந்து வழித்தட அடிப்படையில் மாணவர்கள் தகராறு, அடிதடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. இதில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கையும் விடுத்தது.
மேலும் பிரச்னைக்கு காரணமாக இருக்கும் அரசு பேருந்துகளில் வரும் ரூட் தல எனப்படும் 90 மாணவர்களை  அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எனவும், கல்லூரி மாணவர்களை வன்முறைக்கு தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது எனவும் காவல்துறை முடிவு செய்தது. இதன்படி, ரூட் தல மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீதும் குற்ற  விசாரணைமுறைச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் 6 மாதங்களுக்கு எவ்வித தவறுகளிலும் ஈடுபடமாட்டோம், மீறி ஈடுபட்டால் கைது செய்து, சிறையில் அடைக்கலாம் என உறுதி மொழி பத்திரத்தை பெற்று வருகின்றனர்.
கட்செவி அஞ்சல்: இதில் கடந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் 58  மாணவர்களிடம் உறுதி மொழி பத்திரம் பெறப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ரூட் தல மாணவர்கள் என்ற பெயரில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து புகார் தெரிவிக்க 90875 52233 என்ற கட்செவி அஞ்சல் எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை அறிவித்தது.அதேபோல சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் (ஃபேஸ்புக்), சுட்டுரை பக்கம் (டிவிட்டர்) ஆகியவற்றிலும் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com