லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை
By DIN | Published On : 31st July 2019 04:21 AM | Last Updated : 31st July 2019 04:21 AM | அ+அ அ- |

எண்ணூர் எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் முருகன் (35) செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த முருகன். லாரி ஓட்டுநரான இவர் திருமணமாகாத நிலையில் ஏற்கெனவே திருமணமாகி கணவனை இழந்த ஆரோக்கிய மேரியுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் பூட்டிய வீட்டுக்குள் அலறல் சப்தம் கேட்டதாம். சிறிது நேரத்தில் இரண்டு பேர் அரிவாளுடன் வேகமாக வெளியேறியதை அருகில் வசிப்போர் பார்த்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது முருகன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூர் காவல் நிலைய போலீஸாரிடம் பொதுமக்கள் அளித்த தகவலின்படி முருகனுடன் குடும்பம் நடத்தி வந்த ஆரோக்கிய மேரியின் மகன் நரேஷ், மருமகன் மரியதாஸ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸார் கொலையாளிகளைப் பிடிக்க முயன்றபோது கருணாகரன் காயமடைந்தார். இதையடுத்து கருணாகரனும், காயமடைந்த கொலையாளி நரேஷும் ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மரியதாஸ், சிகிச்சை பெற்றுவரும் நரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.