கோயம்பேடு சந்தையில் கடைகளை ஏலம் விட தடை கோரிய வழக்கு: சிஎம்டிஏவுக்கு நோட்டீஸ்

கோயம்பேடு சந்தையில் கடைகளுக்கு அதிக வாடகை நிர்ணயம் செய்து ஏலம் விடுவதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து


கோயம்பேடு சந்தையில் கடைகளுக்கு அதிக வாடகை நிர்ணயம் செய்து ஏலம் விடுவதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்பேடு சந்தை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: 
போக்குவரத்து நெரிசல் காரணமாக கொத்தவால்சாவடி பகுதியில் மொத்த வியாபாரம் செய்து வந்த காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் வியாபாரிகளை கோயம்பேடு சந்தைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த வியாபாரிகளுக்கு சதுர அடி ரூ.375 என வாடகை கட்டணம் நிர்ணயம் செய்து கடைகளை வழங்கியது. பிற வியாபாரிகளுக்கு சதுர அடி ரூ.450 என கட்டணம் நிர்ணயம் செய்தது. கொத்தவால்சாவடியில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் கோயம்பேடு சந்தைக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிஎம்டிஏ இந்த சலுகையை வழங்கியது. தற்போது சிஎம்டிஏ நிர்வாகம், கோயம்பேடு சந்தையில் காலியாக உள்ள கடைகளை மொத்த வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஒரு கடைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், அதிக வாடகையை நிர்ணயித்தும் உள்ளது.    இது வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கும் அரசின் கொள்கைக்கு எதிரானது. இந்த விதிமீறல் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடைகளுக்கு அதிகமான வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்து ஏலம் விட சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதற்கு தடை கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி தடை விதிக்க மறுத்து விட்டார். எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கடைகள் ஏலம் விட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். 
இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக வரும் ஜூன் 6-ஆம் தேதிக்குள் சிஎம்டிஏ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com