ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் சரிவு

ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 14 சதவீதம் சரிவு


ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14 சதவீதம் சரிவடைந்துள்ளது.
தகுதியானோர் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகளைப் போக்குவரத்துத் துறைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை (மார்ச் மாத நிலவரப்படி) கடந்த ஆண்டை விட 14 சதவீதம் சரிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெறுவோரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் குறைந்துள்ளது. 
கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 40 ஆயிரத்து 496 ஓட்டுநர் உரிமங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு 8 லட்சத்து 91 ஆயிரத்து 965 ஓட்டுநர் உரிமங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன. 
கடந்த ஆண்டு அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பழகுநர் உரிமம் கட்டாயம் எனக் கூறப்பட்டதால் பலரும் விண்ணப்பித்தனர். ஆனால் இத்திட்டத்தில் தகுதியில்லாத விண்ணப்பத்துக்கு வாகனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, பலரும் அடுத்த கட்டமாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கவில்லை. இதுவே கடந்த ஆண்டு பழகுநர் விண்ணப்பம் குறைந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது. எனினும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேர்வு முறை சற்று கடுமையாக்கப்பட்டுள்ளதால்  பலரும் தேர்ச்சி பெறவில்லை என்கின்றனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி கூறியது: மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுபடி, ஓட்டுநர் உரிமம் பெற 8 அல்லது எச் வடிவிலான தேர்வு தளத்தில் ஓட்டிக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின்போது வாகன ஓட்டிகள் தீவிரமாகக் கண்காணிப்படுகிறார்கள். மேலும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இதுபோன்ற தளங்கள் அமைக்க இடமில்லாத பட்சத்தில், அருகிலுள்ள மேம்படுத்தப்பட்ட அலுவலகங்களில் அந்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளை பொதுவெளியிலோ அல்லது சாலைகளிலோ கட்டாயமாக நடத்தக் கூடாது என அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 
இதுகுறித்து போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தது: தற்போது ஓட்டுநர் உரிமம் பெற தொலைபேசி கட்டண ரசீது அல்லது வாடகை ஒப்பந்தம் மட்டுமே இருப்பிடச் சான்றாக பெறப்படுகிறது. 
இதனை சுலபமாக ஏற்பாடு செய்ய முடிவதால், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டோர், தேர்ச்சி பெறாதவர்களும்  வேறு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் தற்போது அனைவரது விண்ணப்பமும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால், தகுதியானோருக்கு மட்டுமே  ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com