குடிநீர் பற்றாக்குறை: தேவையான நீரை எடுத்து வர ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வேண்டுகோள்
By DIN | Published on : 14th June 2019 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தேவையான நீரை எடுத்து வர ஊழியர்களுக்குப் பெருநிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சென்னையில் மார்ச் மாதம் முதலே கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையானது சென்னையின் முக்கிய பகுதி மட்டுமன்றி புறநகர்ப் பகுதியிலும் தொடர்ந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சோழிங்கநல்லூர், பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, அவர்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு வரும்படி கூறியுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கூறும் வாசகங்கள் இடம்பெற்ற விழிப்புணர்வு பலகைகளையும், தங்கள் நிறுவன வளாகத்தில் வைத்துள்ளன. வேறு சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளன. அந்தப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள விடுதிகள், வீடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.