குடிநீர் லாரிகளுக்காக இனி காத்திருக்கத் தேவையில்லை!: குறைந்த அளவு நீரை உடனுக்குடன் வழங்க ஏற்பாடு

சென்னையில் லாரி குடிநீருக்கு முன்பதிவு செய்து இனி அதிக நாள்கள் காத்திருக்கத் தேவையில்லை என்றும்,  ஒதுக்கீட்டு முறையில், குறைந்த கொள்ளளவு லாரி குடிநீர் உடனுக்குடன் பொதுமக்களுக்கு


சென்னையில் லாரி குடிநீருக்கு முன்பதிவு செய்து இனி அதிக நாள்கள் காத்திருக்கத் தேவையில்லை என்றும்,  ஒதுக்கீட்டு முறையில், குறைந்த கொள்ளளவு லாரி குடிநீர் உடனுக்குடன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந. ஹரிஹரன்,  செயல் இயக்குநர் த.பிரபுசங்கர் ஆகியோர்  சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மாநகரின் கோடைகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். தற்போது ஏரிகளில் 5 சதவீத தண்ணீர் மட்டுமே அதாவது 626 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது.  பருவமழை சரியாக பெய்யாததால் அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்தளவே இருந்தபோதும்,  தற்போதுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர்ப்படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு அமர்த்துதல், சிக்கராயபுரம் கல்குவாரிகள் உள்பட பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலம் தினமும் 52 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
 சென்னையில் தற்போது தினமும் 900 லாரிகள் மூலமாக 9,400 லாரி நடைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதில் 6,500 நடைகள் இலவசமாகவும்,  மீதமுள்ள 2,900 நடைகள் தொலைபேசி,  ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும் வழங்கப்படுகிறது. கால தாமதமின்றி குடிநீர் வழங்கும் வகையில் திறனுக்கேற்ப லாரிகள் நடைகள் தீர்மானிக்கப்பட்டு அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்றவாறு அடுக்குமாடி கட்டடங்கள்,  தனி வீடுகள் என்ற ஒதுக்கீட்டு முறையில் பதிவு செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.  
இந்த நடைமுறையின் மூலம் நுகர்வோர் பதிவு செய்யும் நாளிலிருந்து அடுத்த இரண்டு நாள்களுக்குள்  தேவைப்படும் லாரி தண்ணீரை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும்.  மேலும் நுகர்வோர் தேர்வு செய்யும் நாளில் காலதாமதமின்றி குடிநீர் வழங்க இயலும்.  நுகர்வோரின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த சேவைக்காக தற்போது 2 ஆயிரம் லிட்டர்,  3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 எண்ணிக்கையில் சிறிய ரக லாரிகள் பயன்படுத்தப்படவுள்ளன என்றனர். 
மழை இல்லாவிட்டாலும் 52 கோடி லிட்டர் குடிநீர் உறுதி
மழை இல்லாவிட்டாலும் சென்னை மக்களுக்கு தினமும் 52 கோடி லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியது:   நெய்வேலி நீர்ப்படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஒரு கோடி லிட்டர் கூடுநீர் எடுக்கப்படும். நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்றிலிருந்து ரூ.6.67 கோடியில் 6 கோடிலிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ரூ.53 கோடியில் ரெட்டேரி,  பெரும்பாக்கம்,  அயனம்பாக்கம் ஆகிய ஏரிகளிலிருந்து தினமும் 3 கோடி லிட்டர் நீரைச் சுத்திகரித்து வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் ரெட்டேரியில் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமாக கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் பெறப்படுகிறது. 
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை வடிவமைத்து நிறுவி, 20 ஆண்டுகள் இயக்கி பராமரிக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1 ,689.35 கோடிக்கு கடந்த மே 27-ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  பருவமழை பெய்யாவிட்டால் கூட சென்னை மக்களுக்கு தினமும் 52.5 கோடி லிட்டர் குடிநீரை தடையின்றி வழங்க முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com