வெயிலின் தாக்கம்: சென்னையின் மின்தேவை 3,660 மெகாவாட்டாக உயர்வு

கோடை வெயிலின் தாக்கத்தால் சென்னையின் மின்தேவையானது 3,660 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.


கோடை வெயிலின் தாக்கத்தால் சென்னையின் மின்தேவையானது 3,660 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே தமிழகத்தின் மின்தேவை கடுமையாக அதிகரித்து அம்மாதம் 3-ஆம் தேதி, 16,151 மெகாவாட் எனும் புதிய உச்சத்தை அடைந்தது. அதேபோல், ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நிலவரப்படி, மின்நுகர்வும் வரலாறு காணாத அளவு உயர்ந்து 369.940 மில்லியன் யூனிட் ஆக இருந்தது. தற்போது சென்னையின் மின்தேவையும் 3,660 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
 கடந்த ஆண்டு சென்னையின் அதிகபட்ச மின்தேவை, 3,537 மெகாவாட்டாக இருந்தது. இது தற்போது 100 மெகாவாட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை 3,648 மெகாவாட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் இனி 3,600 மெகாவாட்டுக்கு மேல் அளவிலான மின்சாரமே தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கரணையைச் சேர்ந்த அந்தோணி கூறியதாவது: இரவு 10 மணிக்கு மேல் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. 
இந்த மின் வெட்டானது 30 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரம் வரை நீடிக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் தூக்கமில்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதுகுறித்து புகார் அளிக்க மின்சார வாரியத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் மின்வெட்டானது நள்ளிரவு 3 மணி வரை தொடர்கிறது. இவ்வாறான நிலை சென்னையின் பிரதான பகுதிகளை விட புறநகர்ப் பகுதிகளில்தான் அதிகமாக நடக்கிறது. இதற்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்தேவை கடுமையாக அதிகரித்த போதிலும், விநியோகிக்க போதிய மின்சாரம் உற்பத்தி செய்வதோடு கொள்முதலும் செய்யப்படுகிறது. ஆனால் மின்வெட்டுக்கு மின்பகிர்மானப் பொருள்களில் ஏற்படும் பழுதே காரணம். அவ்வாறு பழுதான பொருள்களை மாற்ற போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மின்சார வாரிய அதிகாரிகள் உடனுக்குடன் செய்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com