சென்னையில் வீடுகள், உணவகங்கள், நிறுவனங்களில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு

சென்னை மாநகரில் வீடுகளில் தொடங்கி உணவகங்கள்,  பள்ளிகள் என எங்கும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் குடிநீருக்காக காத்திருக்கும் குடங்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் குடிநீருக்காக காத்திருக்கும் குடங்கள்.

சென்னை மாநகரில் வீடுகளில் தொடங்கி உணவகங்கள்,  பள்ளிகள் என எங்கும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தண்ணீரைப் பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 78 லட்சம் பேர் புறநகர்ப் பகுதிகளில் 23 லட்சம் மக்கள் என சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு தற்போது 110 கோடி லிட்டர் குடிநீர்த் தேவைப்படுகிறது.  ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அதில் பாதியளவுக்கு அதாவது 55 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.  தற்போதுவரை சென்னையில் வெப்பம் குறையாததால் நாளுக்கு நாள் தண்ணீர்த் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
வீட்டிலிருந்தே வேலை செய்ய...: கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வாடகைக்கு குடியிருந்த மக்கள் வெளியேறிவருகின்றனர். சிறுசேரி,  சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளைப் பொருத்தவரை மாணவர்கள் வீட்டிலிருந்தே குடிநீர் எடுத்துவர வேண்டும் என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். 
ஹோட்டல்களில் மதிய உணவு நிறுத்தம்: அதேவேளையில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக நகரின் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன.  இந்தநிலையில், அடுத்த கட்ட எச்சரிக்கையாக சைதாப்பேட்டை,  புரசைவாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள  தனியார் உணவகங்களில் பாத்திரம் கழுவவும்,  உணவு தயாரிக்கவும் தண்ணீர் இல்லாததால் மதிய உணவு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நிலவி வரும் தண்ணீர்த் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண லாரி குடிநீர், விவசாயக் கிணறுகள்,  கல்குவாரிகள்,  நெய்வேலி படுகையிலிருந்து குடிநீர்,  ரெட்டேரி-அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து குடிநீர் பெறப்படும் என பல மாற்றுவழிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வந்தாலும் அவையனைத்தும் எதிர்பார்த்தளவுக்கு பலனைத் தருமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஏனெனில் அனைத்துத் திட்டங்களும் ஒரே நேரத்தில் நிறைவேறினாலும் கூட மொத்தத் தேவையில் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீரைப் பெற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
ரூ. 4 ஆயிரம் கொடுத்தாலும்...: இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியது:  சென்னையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரிய லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீரும் தேவை காரணமாக சில நாள்களுக்குள் தீர்ந்து விடுகிறது.  மீண்டும் பதிவு செய்தால் 15 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் ரூ.4 ஆயிரம் கொடுத்தாலும் தனியாரிடம் குடிநீர் கிடைப்பதில்லை. தெருக் குழாய்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது.  இந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு குடம் தண்ணீரை அதிகபட்சம் ரூ.20  வரை அதாவது கேன் குடிநீருக்கு நிகரான விற்பனை செய்கின்றனர்.  சமைப்பது,  துவைப்பது,  பாத்திரங்கள் கழுவுவது, குளிப்பது,  கழிவறைகளுக்கு என இன்றியமையாத தேவைகளுக்கு தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கிறோம். 
தமிழக அரசுக்கு வேண்டுகோள்:  இன்னும் சில நாள்களுக்கு இந்த நிலை தொடர்ந்தால் சென்னையில் குடியிருக்கும் வெளியூர்வாசிகள் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விடுவர். எனவே நிலைமை கைமீறிச் செல்வதற்குள் தமிழக அரசும்,  குடிநீர் வாரியமும் ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டு சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர். 
நம்பிக்கை தரும் குடிநீர் வாரியம்:  இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.  வேலூர் மாவட்டத்திலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் எடுத்து வருவது,  திட்டப்பணிகளை விரைவாக முடிக்க கூடுதல் பணியாளர்களை நியமிப்பது,  126 மின் மோட்டார்களைப் பொருத்தி ஆழ்துளைக் கிணறுகளை நிறுவுதல் என பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  இதனால் குடிநீர்த் தட்டுப்பாட்டை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் பருவமழை கைகொடுத்தால் சென்னையின் குடிநீர் விநியோகம்  பழைய நிலைக்கு விரைவாகத் திரும்பும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com