மீன்பிடிக்கச் சென்று இரு வாரங்களாகியும் திரும்பாத 7 காசிமேடு மீனவர்கள்
By DIN | Published On : 18th June 2019 04:19 AM | Last Updated : 18th June 2019 04:19 AM | அ+அ அ- |

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 4-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. மேலும் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காசிபுரம் டி பிளாக்கில் வசிப்பவர் நந்தனன் (75). இவருக்குச் சொந்தமான பைபர் படகில் நந்தனன் மற்றும் மேலும் ஆறு பேர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வழக்கமாக ஓரிரு நாள்களில் கரை திரும்பியிருக்க வேண்டிய அவர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகும் கரை திரும்பவில்லை.
மேலும், மீனவர்களுடனான தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் அச்சமடைந்த அவர்களது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை மீன்வளத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மீன்பிடித் துறைமுக காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மீன்வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தேடும் பணியில் தொய்வும், சுணக்கமும் உள்ளதாகக் குற்றம்சாட்டினர்.
ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்கள் எங்கேனும் கரை சேர்ந்திருக்க வேண்டும் அல்லது வேறு கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து தேடி வருவதாக, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.