அரசின் உத்தரவை மீறும் ஆவின் நிறுவனம்: பாலகங்களில் பயன்படுத்தப்படும் நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள்

தமிழக அரசின் உத்தரவை மீறி சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சில பாலகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள்
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய ஆவின் பாலக குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ள நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய ஆவின் பாலக குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ள நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள்.



தமிழக அரசின் உத்தரவை மீறி சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சில பாலகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு நிறுவனங்களே அதை மீறுவது கவலை அளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் பால்வளத் துறையின்கீழ் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் பால் மற்றும் அது சார்ந்த தயிர், வெண்ணெய், நெய், இனிப்புப் பலகாரங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இப்பொருள்களின் விற்பனைக்கென சென்னையின் பல இடங்களில் பால் விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பாலகங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பால், தயிர், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட  அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையும் மீறி பயன்படுத்துவோர், விற்பனை செய்வோருக்கு ரூ.100 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
மீறப்படும் உத்தரவு: இந்தப் பாலகங்களில் சூடான பாதாம் பால், காபி, தேநீர், ரசகுல்லா, குலோப்ஜாமுன், பால்கோவா ஆகியவை நல்ல தரத்துடனும், மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவற்றில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தில் வெளிப்படையாகவே தடை செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாலகத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோருக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட கப்புகள் மூலம் பாதாம் பால் வழங்கப்படுகிறது.
கண்காணிப்பு தேவை: இதுகுறித்து கன்ஸ்யூமர் அúஸாசியசன் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்குத் தடை இருந்தாலும், அப்பொருள்கள் பொதுவெளியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
குறிப்பாக அரசு நிறுவனங்கள் இவற்றை மீறுவது என்பது நெகிழி பயன்பாடு ஒழிப்பில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
ஆய்வு நடத்தப்படும்: இதுகுறித்து ஆவின் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்த உடனேயே, அப்பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து விட்டோம். 
அதுமட்டுமில்லாமல், சென்னை நகரில் பாலகங்களின் விற்பனையைப் பொருத்து 1,500-க்கும் மேற்பட்ட எவர்சில்வர் டம்பளர்கள் வாங்கப்பட்டு அனைத்து பாலகங்களுக்கு கடந்த ஜனவரி 2-ஆம் தேதியே வழங்கப்பட்டுவிட்டன. சில பாலகங்களில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெகிழி பூசப்பட்ட காகித கப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 
இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ரசகுல்லா, பால்கோவா போன்ற பொருள்கள் அடைக்கப்பட்டிருக்கும் நெகிழி கப்புகளுக்கு அரசிடம் இருந்து விலக்கு பெற்றுள்ளோம் என்றார்.
உறுதியான தடை:  தமிழகத்தில் மாதத்துக்கு சுமார் 12 ஆயிரம் டன்னாக காகித கப்புகள் பயன்பாடு இருந்தது. காகித கப்புகளில் 6 சதவீத நெகிழி உள்ளதால், இதை 4 சதவீதமாக குறைத்து அவற்றுக்கு விலக்கு அளிக்கலாம் என தமிழக அரசு முதலில் திட்டமிட்டது. ஆனால், அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த கப்புகளால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.
ரூ.3.51 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த இரண்டு நாள்களில் நடத்தப்பட்ட  சோதனைகளில் 3,565 கடைகளில் இருந்து 1,924 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 125 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், ரூ. 3.51 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com