கழிப்பறைகள் மூடப்பட்டதற்கு பராமரிப்புப் பணிகளே காரணம்: ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாகவே கழிப்பறைகளை மூடி வைத்திருந்ததாகவும், மாறாக தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு காரணம் அல்ல என்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம்


பராமரிப்புப் பணிகள் காரணமாகவே கழிப்பறைகளை மூடி வைத்திருந்ததாகவும், மாறாக தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு காரணம் அல்ல என்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
போதிய அளவு தண்ணீர் இல்லாததால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அதனை மறுக்கும் விதமாக இந்த விளக்கத்தை மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
355 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தினமும் 15 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்களின் பயன்பாட்டுக்காக மொத்தம் 1,020 கழிப்பறைகள் உள்ளன. அவற்றில் அனைத்துமே நல்ல நிலையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அவற்றை பராமரிக்க வேண்டியிருப்பதால், அவற்றில் 25 கழிப்பறைகள் மட்டும் இரவு நேரங்களில் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன.
மற்றபடி மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதே இல்லை. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் ஒருநாள் தண்ணீர் தேவை 16 லட்சம் லிட்டராகும். அதில் ஆழ்துளை கிணறு மூலமாக 9 லட்சம் லிட்டர் நீர் பெறப்படுகிறது. இதைத் தவிர, குடிநீர் வாரியம் மூலமாகவும், டேங்கர் லாரிகள் மூலமாகவும் 7 லட்சம் லிட்டர் நீர் பெறப்படுகிறது. எனவே, தண்ணீர் பஞ்சத்தால் கழிப்பறைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுவது சரியல்ல என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com