பூஜ்ஜியத்தை நெருங்கும் ஏரிகளின் நீர் இருப்பு: அண்டை மாநிலங்களின் உதவியை எதிர்நோக்கும் சென்னை

 சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களின் மொத்த நீர் இருப்பு ஒரு சில நாள்களில் பூஜ்ஜியத்தை எட்டும் நிலையில் உள்ளது.  தண்ணீர்த் தட்டுப்பாடு
பூஜ்ஜியத்தை நெருங்கும் ஏரிகளின் நீர் இருப்பு: அண்டை மாநிலங்களின் உதவியை எதிர்நோக்கும் சென்னை


 சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களின் மொத்த நீர் இருப்பு ஒரு சில நாள்களில் பூஜ்ஜியத்தை எட்டும் நிலையில் உள்ளது.  தண்ணீர்த் தட்டுப்பாடு மிகவும் தீவிரமடைந்துள்ளதால் ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் உதவியை சென்னை மாநகரம் எதிர்நோக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 
வடகிழக்குப் பருவமழை கடந்த ஆண்டு பொய்த்து போனதாலும் சென்னையின் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதாலும், நான்கு ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.
  தற்போதைய சூழலில் இந்த நான்கு ஏரிகளிலும் வெறும் 23 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. 
 குறிப்பாக சென்னை குடிநீருக்காக பூண்டி ஏரியிலிருந்து மட்டும் தினமும் 12 கன அடி தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு வருகிறது. இதுவும் அடுத்த மூன்று நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும். இதையடுத்து ஏரிகளின் மொத்த நீர் இருப்பு ஒற்றை இலக்கத்தை எட்டும் நிலையில் உள்ளது. 
இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை குடிநீர் வாரியம்  தொடங்கியுள்ளது.
 இருப்பினும் அந்தத் தண்ணீர் போதுமான அளவில் இல்லாததால், சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள்,  வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் இல்லாததால் அவற்றை தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றனர்.   இதேநிலை தொடர்ந்தால், வரும் நாள்களில், குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திராவிடம் இருந்து தண்ணீர் பெறுவதற்கான இறுதி முயற்சிகளை தமிழக அரசு மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக பொதுப்பணித் துறை,  குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலம், விஜயவாடா சென்றனர்.  அங்கு, ஆந்திர நீர்வளத்துறை செயலர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, சென்னையின் தேவை கருதி கண்டலேறுஅணையில் இருந்து  2 டி.எம்.சி. நீரை திறக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், கண்டலேறு அணையில் தற்போது 4.45 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது.  அணையின் நீர் இருப்பு 7 டிஎம்சியை அடைந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என  ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.   இருப்பினும், சென்னை நிலையை கருத்தில் கொண்டு நீர் திறக்கும்படி அவர்கள் கேட்டுஉள்ளனர்.  மேலும், நீரைப் பெறுவதற்காக இதுவரை ஆந்திராவுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு தொகையைச் செலுத்த தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். 
இந்தப் பிரச்னையை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நீர்வளத் துறை அமைச்சர் அனில்குமார் ஆகியோரின் கவனத்துக்கு  எடுத்துச் செல்வதாக ஆந்திர அதிகாரிகள் கூறியுள்ளனர். 
மேலும் மற்றொரு அண்டை மாநிலமான கேரளம் போதியளவு தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மொத்தத் தேவையில் இரண்டு சதவீதத்தை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததால் அதைப் பெற்றும் பயனில்லை என்பதால் தயக்கம் ஏற்பட்டுள்ளது.   தற்போதைய சூழலில் ஆந்திர மாநிலத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் அல்லது பருவமழை மட்டுமே தீர்வாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
சென்னை ஏரிகளின் நீர் இருப்பு 
(மில்லியன் கன அடியில்,  மொத்த கொள்ளளவு அடைப்புக்குறிக்குள்):
பூண்டி    22 (3,231)
சோழவரம்    0 (1,080)
புழல்    0 (3,300)
செம்பரம்பாக்கம்    1 (3,645)
மொத்தம்    23 (11,257)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com