எண்ணூர் ரெளடி கொலை வழக்கில் 6 பேர் கைது
By DIN | Published On : 24th June 2019 05:00 AM | Last Updated : 24th June 2019 05:00 AM | அ+அ அ- |

எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரெளடி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
எண்ணூர் எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வந்தவர் பாண்டியன் (40). சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாண்டியன் முக்கியக் குற்றவாளியாவார். மேலும், திருவொற்றியூரைச் சேர்ந்த கேட் சுப்பிரமணி கொலை வழக்கிலும் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் மீது மேலும் சில கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில ஆண்டுகள் சிறையில் இருந்த பாண்டியன் பிணையில் விடுவிக்கப்பட்டு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் தனது மனைவி காயத்ரியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியின் கண் முன்பே பாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீஸார் பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த எண்ணூர் காவல் நிலைய போலீஸார், ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (25), அருண்ராஜ் (22), மோகன் (23 ), பிரபாகரன் (19), சரண் (20), மோகன்ராஜ் (24 ) உள்ளிட்ட ஆறு பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.