மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம்: ஆக.31-க்குள் அமல்படுத்த ரயில்வே முடிவு
By DIN | Published On : 24th June 2019 05:07 AM | Last Updated : 24th June 2019 05:07 AM | அ+அ அ- |

ரயில் பயணச்சீட்டுக்காக மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தெற்கு ரயில்வே காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதேநேரத்தில், மானியம் இல்லாத கட்டணம் வழக்கமான கட்டணத்தைவிட 47 சதவீதம் அதிகமாக இருக்கும்.
ரயில் நிலையத்தில் வை-பை வசதி ஏற்படுத்துதல், தனியாக ரயில் இயக்குதல் உள்பட 20-க்கும் மேற்பட்ட திட்டங்களை 100 நாள்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில் பயணச்சீட்டுகள் மீதான சலுகையை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் சில நாள்களுக்கு முன்பு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்னதாக அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்ட அதிகாரிகளுக்கு தலைமை வணிக மேலாளர்( பயணிகள் முன்பதிவு முறை) கே.சங்கரசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அலுவலக பதிவேட்டின்படி, பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் வழக்கமான செலவில் 53 சதவீதம் திரும்ப கிடைக்கிறது. மானியம் இல்லாத பயணச்சீட்டின் கட்டணம் 47 சதவீதம் அதிகமாக இருக்கும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: சென்னை-மதுரை இடையே தூங்கும் வசதி அடிப்படை கட்டணம் ரூ.265. இதன் முழு கட்டணம் சுமார் ரூ.380-ரூ.390 இருக்கலாம். சென்னை -காட்பாடி இடையே அதிவிரைவு ரயில்களில் முன்பதிவில்லாத கட்டணம் ஒரு பயணச்சீட்டுக்கு சுமார் ரூ.35 அதிகரிக்கும். எல்லா ரயில் நிலையங்களில் மானியம் இல்லாத கட்டணப் பட்டியல் வைக்கப்படும். மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் தொடர்பாக ரயில்களின் உள்புறம், ரயில் நிலையங்கள், சமூக ஊடகம், அச்சு, காட்சி ஊடகம் மூலமாக மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ரயில் டிக்கெட் மானியத்தைத் திரும்ப கொடுக்கும் பிரசாரத்தை தொடங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில்வே நிர்வாகம் ஆண்டு பயணச்சீட்டு வருவாயை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த இலக்கு வைத்துள்ளது. மானியம் இல்லாத பயணச்சீட்டு பதிவு விருப்பத்தை செயல்படுத்துவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
மூத்த குடிமக்களுக்காக மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பயணச்சீட்டு கவுன்ட்டர், இணையவழி மூலமாக பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போது, முழு மானியம் அல்லது 50 சதவீதம் மேல் விட்டு கொடுப்பதற்கு ஒரு விருப்பம் கொடுக்கப்பட்டது. இந்த முயற்சி முன்னோடியாக இருந்தது. ரயில்வேயில் அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, நாடு முழுவதும் ரயில்களில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டில் மார்ச் வரை 843 கோடி பேர் பயணித்தனர். இதன் மூலம், ரயில்வேக்கு ரூ.51,000 கோடி வருவாய் கிடைத்தது. இருப்பினும் , 2013-14-ஆம் ஆண்டில் ரயில்வேக்கு பயணிகள் வருவாய் ரூ.36,532 கோடியாக இருந்தது. அப்போது, 842 கோடி பேர் பயணம் மேற்கொண்டனர். ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயராதபோது, கடந்த 4 ஆண்டுகளில் ரயில்வே வருவாய் ரூ.14,500 கோடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.