மனநல காப்பக சுவரில் விழிப்புணர்வை விதைத்த மாணவிகள்!

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக சுற்றுச் சுவரில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு சித்திரங்களை கல்லூரி மாணவிகள் வரைந்திருப்பது
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாளையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் சுவரில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஓவியங்களை  வரைந்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள்.
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாளையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் சுவரில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஓவியங்களை  வரைந்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள்.


கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக சுற்றுச் சுவரில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு சித்திரங்களை கல்லூரி மாணவிகள் வரைந்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மது, புகை, போதை பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் அவற்றை வரைந்துள்ளனர். கல்லூரியின் சமூகப் பங்களிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து மனநல காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரா, சமூக நல அதிகாரி சுமதி ஆகியோர் கூறியதாவது:
கேண்டில் என்ற தன்னார்வ அமைப்பினரும், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் 36 பேரும் இணைந்து சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு சித்திரங்களை வரைந்துள்ளனர். அதற்கான வண்ணங்கள், வரைகலை உபகரணங்கள் ஆகியவற்றை சிலர் அன்பளிப்பாக வழங்கினர். விரைவில் சுற்றுச்சுவரின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு சித்திரங்களை வரைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 24 வார்டுகள் உள்ளன. அங்கு மன நல பாதிப்புக்குள்ளான 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதைத் தவிர போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு புற நோயாளிகள் பிரிவில் ஒவ்வொரு புதன்கிழமையும் மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் புதிதாக போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 
நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒரு மருத்துவரும், மருத்துவப் பணியாளரும், செவிலியரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com