விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை
By DIN | Published On : 04th March 2019 04:05 AM | Last Updated : 04th March 2019 04:05 AM | அ+அ அ- |

புலனாய்வுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு, பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த விமான தாக்குதல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத் துறை எச்சரித்து இருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க விமான நிலையங்கள், விமான ஓடுதளங்கள், விமானப்படை தளங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், விமான பயிற்சிப் பள்ளிகள் ஆகியவற்றின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
மேற்கண்ட இடங்களுக்கு ஆள்கள் வருவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முழுமையாகச் சோதனை செய்ய வேண்டும். விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை நன்கு சோதனையிட வேண்டும். விமான நிலையக் கட்டடத்தின் முன் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது.
ஆளில்லா குட்டி விமானங்கள், கிளைடர்கள், சூடான காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் பறப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உரிய அங்கீகாரம் இல்லாத யாரையும் விமானத்தின் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. அடுத்த அறிவிப்பு வரும் வரை விமான நிலையங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.