சுடச்சுட

  
  child


  மிகக் குறைந்த எடையில் (625 கிராம்) பிறந்த குழந்தைக்கு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் நான்கு மாதங்களாக தொடர் சிகிச்சையளித்து  காப்பாற்றியுள்ளனர். 
  இதுகுறித்து  மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் கூறியதாவது:
  காரைக்குடியைச் சேர்ந்த சந்தானலட்சுமி - சிவகுமார் தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பேறு காலத்தில் சந்தானலட்சுமி, டைபாய்டு காய்ச்சலால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக 7 மாதங்களில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 
  குறை பிரசவத்தில் பிறந்த அக்குழந்தை வெறும் 625 கிராம் எடை மட்டுமே இருந்தது. மேலும், உடலின் உள் உறுப்புகளும் சரிவர வளர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது சுவாசக் கோளாறுப் பிரச்னையும்  இருந்ததால், செயற்கை சுவாசக் கருவி
  களின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது.  உரிய மருத்துவக் கண்காணிப்பு மற்றும் உயர் சிகிச்சை காரணமாக தற்போது அக்குழந்தை 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருக்கிறது. 
  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான எடை கொண்ட குழந்தை ஒன்றுக்கு சிகிச்சையளித்தது இதுவே முதன்முறை என்றார் அவர்.
  இதுதொடர்பாக பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்னம் கூறியதாவது:
  பொதுவாக பிறந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதன் மூலம் பக்க விளைவுகள் மற்றும் நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்படக் கூடும். அதனால் நுரையீரல், கருவிழி உள்பட பல்வேறு உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை , பல்வேறு சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் நடுவே  போராடி மருத்துவர் குழு  காப்பாற்றியுள்ளது. அடுத்த சில மாதங்களில் குழந்தையின் எடை படிப்படியாக உயரும் என்றார் அவர்.
  குழந்தை திருட்டை தடுக்க பயோ-மெட்ரிக் குழந்தை கடத்தல், திருட்டு சம்பவங்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பயோ-மெட்ரிக் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதன்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட சிகிச்சை பிரிவின் நுழைவாயில் கதவுகள் திறக்கும் எனவும்  கூறினார். மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டி சில அசம்பாவிதச் சம்பவங்கள் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai