ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய ஆணை:  விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு  நீதிமன்றம் உத்தரவு

ஓட்டுநர் உரிமம் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களில் நிரந்தர முகவரியைக் குறிப்பிட்டு சமர்ப்பிக்கப்படும்  விண்ணப்பங்கள்


ஓட்டுநர் உரிமம் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களில் நிரந்தர முகவரியைக் குறிப்பிட்டு சமர்ப்பிக்கப்படும்  விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற போக்குவரத்துறையின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக போக்குவரத்துறை ஆணையர், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்தில் நிரந்தர முகவரி மட்டுமே அச்சிடப்பட உள்ளது. எனவே, நிரந்தர முகவரியைக் குறிப்பிட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். 
அலுவலக முகவரி, ஓட்டுநர் பயிற்சி பள்ளி முகவரியை குறிப்பிட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை ஏற்க உத்தரவிட வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பிற மாநிலங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை ஏற்று ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுவதாக வாதிடப்பட்டது. இதனையடுத்து, அந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள்  2 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட  நீதிபதி,  விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com