ஆக்கிரமிப்பால் பாழ்பட்டுக் கிடக்கும் திருவொற்றியூர் மயானம்

திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி எரிவாயு தகன மேடை மற்றும் மயானம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.

திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி எரிவாயு தகன மேடை மற்றும் மயானம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் மாநகராட்சி அதிகாரிகளும், ஒப்பந்ததாரருமே என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 பின்னணி என்ன?: திருவொற்றியூர் இடுகாடு அருகில்தான் பட்டினத்தார் ஜீவசமாதி உள்ளது. இதனால் நகரத்தார் வகுப்பைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் எங்கு இறந்தாலும் திருவொற்றியூரில் எரியூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 தொடக்கத்தில் புதர் மண்டிக்கிடந்த இம்மயானத்தை சீரமைத்து மின் மயானம் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் அப்போதைய திருவொற்றியூர் நகராட்சி நிர்வாகம் ரூ. 1.10 கோடி செலவில் அமரர் பூங்கா, இறுதிச்சடங்கு மண்டபம், தகன மேடை ஆகியவற்றுடன் நவீன மயானத்தைக் கட்டி முடித்து கடந்த பிப். 27, 2011-இல் திறந்து வைத்தது. மேலும் சி.பி.சி.எல். நிறுவனம் ரூ.9.50 லட்சம் செலவில் அமரர் ஊர்தியையும் இலவசமாக வழங்கியது. இதனைத் தொடர்ந்து தகன மேடையை இயக்கும் பொறுப்பு பட்டினத்தார் சமூக சேவை மையத்திடம் அளிக்கப்பட்டது.
 கட்டணமில்லா சேவை: ஆனால் இங்கு வேலை செய்து வந்த மயான ஊழியர்களின் எதிர்ப்பால் மயானம் சில மாதங்களிலேயே முடங்கியது. மேலும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தியும் துருப்பிடித்து பயனற்றதாகிவிட்டது. இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த எரிவாயு தகன மேடை மீண்டும் சீரமைக்கப்பட்டு, 2013-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மேலும், சடலங்களை எரிக்க எவ்வித கட்டணமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கு பாரம்பரியமாகப் பணியாற்றி வந்த 11 மயான ஊழியர்கள் மாநகராட்சி ஊழியர்களாக நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நவீன எரிவாயு தகன மேடை திறக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் தொடர்ச்சியாக இருந்துவரும் பல்வேறு பிரச்னைகளால் இன்று வரை முழுமையான சேவையை அளிக்க மாநகராட்சியால் முடியவில்லை என்பது பொதுமக்கள் தரப்பில் கூறப்படும் புகார்.
 ஆக்கிரமிப்பில் மயானம்: மயானத்துக்கு அருகில் குடியிருப்பு பகுதியான திருவொற்றியூர் குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்கள் தொடர்ச்சியாக இம்மயானத்தை தங்களது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சடலங்களை அடக்கம் செய்ய வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கும் அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். புதிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.
 பாதை, சுற்றுப் பகுதி, உறவினர்கள் பயன்பாட்டு அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் குப்பம் பகுதியினர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது. தண்ணீர் விநியோகம் இல்லாததால் நீர் ஊற்று, புல்வெளி காய்ந்துபோய் கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. அறைகளில் அனைத்தும் குப்பை மேடுகள் போல் பொருள்கள் பரவிக் கிடக்கின்றன. சி.பி.சி.எல். நிறுவனம் இலவசமாக வழங்கிய அமரர் ஊர்தி பழைய இரும்புக் கடைக்குக் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. எரிவாயு தகனமேடை இருந்தாலும் விறகு, எரு மூலம் எரிக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. இதனால் எழும் துர்நாற்றம், புகைமண்டலத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்தெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 சுகாதார அதிகாரி - ஒப்பந்ததாரர் பரஸ்பர புகார்: இம்மயானத்தை நேரில் சென்று பார்த்தபோது பொதுமக்கள் புகாரில் நூறு சதவீதம் உண்மை என்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் உதவி சுகாதார அதிகாரி இளஞ்செழியனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:
 எரிவாயு தகனமேடையை செயல்படுத்தும் பொறுப்பு தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எனவே வளாகம் முழுவதும் பராமரிக்க வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமைதான். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எனினும் இது குறித்து பொதுமக்கள் விரிவாகப் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் இளஞ்செழியன்.
 இது குறித்து ஒப்பந்ததாரர் மூர்த்தி கூறியது: மயானத்தையோ எரிவாயு தகன மேடையையே முழுமையாகப் பராமரிக்க முடியாதவாறு அருகில் வசிப்போர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் ஏதாவது கொடுத்தால் மட்டுமே வலைகளை அப்புறப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இரவில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிப்பவர்களைத் தடுக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. புல்வெளி, செயற்கை நீர் ஊற்றைப் பராமரிக்க தண்ணீர் விநியோகம் இல்லை. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இப்பிரச்னைகளையெல்லாம் சரி செய்து கொடுத்தால் முறையாகப் பராமரிக்க நாங்கள் தயார் என்றார் மூர்த்தி.
 என்னதான் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டாலும் தொடர் கண்காணிப்பு மூலம் சேவையை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய கடமை தொடர்புடைய அதிகாரிகளுக்கு உண்டு. எனவே சீரழிவின் விளிம்பில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவொற்றியூர் எரிவாயு தகனமேடை மற்றும் மயானத்தை சீரமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com