தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி: வாகனச் சோதனையில் ரூ.1.33 கோடி பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகனச் சோதனை, சனிக்கிழமையும் தொடர்ந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகனச் சோதனை, சனிக்கிழமையும் தொடர்ந்தது. இச் சோதனைகளில், மொத்தம் ரூ. 1.33 கோடிக்கும் அதிகமான பறிமுதல் செய்யப்பட்டது.
 குளச்சல் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்டு மேரி என்பவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், தண்டன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியையிடம் இருந்து ரூ. 1 லட்சமும், மேக்காமண்டபத்தில் தாசன் என்பவரிடம் இருந்து ரூ. 85 ஆயிரமும் பறிமுதல் செய்தனர்.
 இம்மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 3 தினங்களில் மேற்கொண்ட வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 8.16 லட்சத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேக்காமண்டபத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற 11 மிக்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 விளாத்திகுளம் அருகே நடத்திய வாகனச் சோதனையில், கேரள மாநிலம், பத்தினம்திட்டாவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் சபீக் என்பவரிடமிருந்து ரூ. 2 லட்சத்து 18 ஆயிரமும், ஓட்டப்பிடாரத்தில் நடத்திய சோதனையில் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வேல்முருகன் என்பவரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 2 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
 சீர்காழியில் நடத்திய வாகனச் சோதனையில் கீழச்சாலையிலிருந்து சீர்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஆவணங்களின்றி ரூ.11.50 லட்சம் இருந்தது தெரியவந்தது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 15 இடங்களில் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கைகளில், மொத்தம் ரூ.47 லட்சத்து 26 ஆயிரத்து 850 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ. 7.60 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், கைகடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
 கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், நடத்திய சோதனையில் ரூ.5.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 பெரம்பலூரில், வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த மாரப்பன் மகன் பெரியசாமியின் காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ. 1.50 லட்சமும், அரியலூரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்து 600-உம் பறிமுதல் செய்யப்பட்டன.
 மதுரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், வங்கி ஏடிஎம்-களில் நிரப்புவதற்காக ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 33 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ.35 லட்சத்து 35,100 கைப்பற்றப்பட்டது.
 கர்நாடக மாநிலம், பெங்களூரை அடுத்த உத்ராலி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (32) என்பவர், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு குடும்பத்துடன் கார் மூலம் சென்றுகொண்டிருந்தார். இவர், வீட்டுமனை, நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.20 லட்சம் ரொக்கத்தை காரில் எடுத்து வந்துள்ளார்.
 கார் ஆரணி வழியாக சென்றுகொண்டிருந்தபோது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், காரில் இருந்த ரூ.20 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
 மேலும், இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும், சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com