"பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டுதோறும் 6.9 லட்சம் பேர் இறப்பு'
By DIN | Published On : 24th March 2019 04:00 AM | Last Updated : 24th March 2019 04:00 AM | அ+அ அ- |

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 6.94 லட்சம் பேர் அந்நோயால் இறப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான 3-ஆவது சர்வதேசக் கருத்தரங்கம் சென்னையில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) வரை நடைபெறுகிறது. இக் கருத்தரங்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில் பேசிய அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, "பெருங்குடல் பாதிப்பு மற்றும் அதற்கான நவீன சிகிச்சை முறைகள் தொடர்பான விஷயங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான தளமாக இக்கருத்தரங்கு அமைந்துள்ளது' என்று தெரிவித்தார்.
கருத்தரங்கில் பங்கேற்ற பன்னாட்டு மருத்துவர்கள் கூறுகையில், "தற்போது உலகில் அதிகரித்து வரும் புற்றுநோய்களில் 3-வது இடத்தில் பெருங்குடல் புற்றுநோய் உள்ளது. இதன் பாதிப்பால் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 6 லட்சத்து 94 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்; ஒவ்வோர் ஆண்டும், இந்நோயால் 14 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினர்.