Enable Javscript for better performance
சுயதொழில் விழிப்புணர்வை கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்- Dinamani

சுடச்சுட

    

    சுயதொழில் விழிப்புணர்வை கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் குணசேகரன்

    By DIN  |   Published on : 28th March 2019 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gunasekaran

    கல்லூரி ஆண்டு விழாவில்  மாணவிக்கு பரிசு வழங்கிய மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன். 


    மாணவர்களுக்கு சுயதொழில்கள் குறித்த விழிப்புணர்வை கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தினார்.
    சென்னை திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ பொறியியல் கல்லூரியின் 21-ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட த. ஸ்டாலின் குணசேகரன் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசளித்துப் பேசியது:  
    கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை தங்கள் கல்லூரிகளுக்கு வரவழைத்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை பெரும்பாலான கல்லூரிகள் வழக்கமாக கொண்டுள்ளன. போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் சில கல்லூரிகள்  மாலை நேரங்களில் நடத்துகின்றன. இது மட்டும் போதாது. மாணவர்களுக்கு சுயதொழில் செய்யும் ஆர்வத்தையும் உருவாக்க, அதற்கான சிறப்பு வல்லுநர்களை அழைத்து மாணவர்களிடையே சுயதொழில் குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். 
    மூலதனமாக சிறு தொகையை வைத்து தனது மூளையே பெரும் மூலதனமாக்கிய அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு, தொழில் தொடங்க நினைக்கும் தமிழக இளைஞர்களுக்கு சிறந்த  முன்னுதாரணம் ஆவார். 
    பவானி ஆற்றிலிருந்து நொய்யல் ஆற்றுக்கு 732 ஆண்டுகளுக்கு முன்னரே 56 மைல் நீளமுள்ள கால்வாயை வெட்டினார் காலிங்கராயன். அரிய முயற்சியால்  கட்டியபோதும் தன்னைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதால் குடும்பத்துடன் ஊத்துக்குளி பகுதிக்கு குடிபெயர்ந்தார்.  இதன் மூலம் பொது வாழ்வுக்கு இலக்கணமாக  அவர் திகழ்கிறார். 
    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாகவும் ஈடுபாட்டுடனும் மாணவர்கள் வாசிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின் குணசேகரன்.
     விழாவில் கல்லூரியின் இணைச் செயலாளர் எஸ்.கோபிநாத், ஆலோசகர் எஸ்.மோகன், இயக்குநர் பி.வெங்கடேஷ் ராஜா, தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், முதல்வர் பி.கே.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai