சென்னை அருகே ரூ.9 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 04:13 AM | Last Updated : 30th March 2019 04:13 AM | அ+அ அ- |

சென்னை அருகே ரூ.9 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சுங்கத்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் நுழைவுவாயிலில் வெகுநேரம் லாரி கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியில் ஓட்டுநர் இல்லை என்பதால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த லாரி குறித்து விசாரணை செய்தனர். ஆனால், அந்த லாரி குறித்து யாருக்கும் சரியான தகவல்கள் தெரியவில்லை. இதையடுத்து சுங்கத்துறையினர் அதில் உள்ள சரக்குப் பெட்டகத்தை திறந்தபோது அதில் ரூ.5.57 கோடி மதிப்புள்ள 11.16 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த செம்மரக்கட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததோடு லாரியில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் அந்த சரக்குப் பெட்டகத்தில் கார் உதிரி பாகங்கள் என்ற பெயரில் துபையில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்துக்கு செம்மரக்கட்டைகளைக் கடத்த திட்டமிட்டிருந்ததும், அங்கிருந்து சீனா மற்றும் கொரிய நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சுங்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3.60 கோடி மதிப்புள்ள 7.34 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு ஒருவரை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் பலரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.