மருத்துவப் பகுப்பாய்வுக் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
By DIN | Published On : 05th May 2019 02:22 AM | Last Updated : 05th May 2019 02:22 AM | அ+அ அ- |

சென்னையில் சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் கீழ் 140 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், நாள் முழுவதும் செயல்படும் 19 தாய்சேய் நல மையங்கள், 5 பகுப்பாய்வுக் கூடங்கள், 2 போதை மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் சிறப்பான மருத்துவ சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள நுங்கம்பாக்கம் பகுப்பாய்வுக் கூடத்தில் ஆணையர் பிரகாஷ் சனிக்கிழமை திடீரென ஆய்வு செய்தார். அங்கு இயங்கிவரும் பொது ஆய்வுக்கூடம், டயாலிசிஸ் மையம் ஆகியவற்றையும், அல்ட்ராசோனிக், இ.சி.ஜி., எக்ஸ்-ரே கருவிகளின் செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், அதுதொடர்பான விவரங்களை மருத்துவ அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை அவர்களுக்கு ஆணையர் வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) பி.மதுசூதன் ரெட்டி, மாநகர சுகாதார நல அலுவலர் டாக்டர் என்.ஏ.செந்தில்நாதன், மண்டல அலுவலர் எஸ்.அனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...