கணினி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம்: அரசு உத்தரவு
By DIN | Published On : 06th May 2019 02:48 AM | Last Updated : 06th May 2019 02:48 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1, 880 தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வி திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 2019-ஆம் ஆண்டு மார்ச் வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கருத்துரு அனுப்பியிருந்தார். அதுதொடர்பாக சில கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு முதன்மைக் கல்வி அதிகாரிகளால் அவை சேகரிப்பட்டு வருவதால் அறிக்கை தயாரிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்தை தர ஆணை வழங்கும்படி பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுள்ளார். அதையேற்று 1,880 தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் மற்றும் இதரப் படிகள் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.