முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: தமிழக அரசு வேண்டுகோள்
By DIN | Published On : 15th May 2019 04:12 AM | Last Updated : 15th May 2019 04:12 AM | அ+அ அ- |

சி.என்.மகேஸ்வரன்
பொது மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடிநீர் வடிகால் வாரியத்தின் திட்டங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய 258 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தினசரி வரையறுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் பொய்த்துப் போன குடியிருப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள், மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொய்வின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்: மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் சிறப்புக் குறை தீர்க்கும் குழுவிடம் தெரிவிக்கலாம்.
இதற்காக குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 94458 02145 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தரப் பரிசோதனைக் கூடம் இயங்கி வருகிறது. குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய வடிகால் வாரியத்தின் பரிசோதனைக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழை குறைவு-சிக்கனம் அவசியம்: தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சராசரி மழையளவு 960 மில்லி மீட்டராகும். ஆனால், மழை பெய்த அளவு 811.7 மில்லி மீட்டர். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் மே வரையிலான மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 108 மில்லி மீட்டர். ஆனால், இதுவரை பெய்த மழையளவு வெறும் 34 மில்லி மீட்டராகும். அதாவது சராசரியை விட 69 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளைச் செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது. எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.