முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 10 ஆண்டு சிறை
By DIN | Published On : 15th May 2019 04:08 AM | Last Updated : 15th May 2019 04:08 AM | அ+அ அ- |

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அமைந்தகரை திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்லாப்தீன் (75). இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதியின் 4 வயது மகளுக்கு ஜெய்லாப்தீன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெய்லாப்தீன் மீது சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகர் மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முதியவர் ஜெய்லாப்தீனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்குரைஞர் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஜெய்லாப்தீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.